

சென்னை,
பிரதமர் நரேந்திர மோடியின் குழந்தைப்பருவத்தை மையப்படுத்தி இந்தியில் வாருங்கள் வாழ்ந்து காட்டலாம் என்ற தலைப்பில் குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் நேற்று தமிழில் வெளியானது. மகேஷ் அதவாலா டைரக்ஷனில், 30 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படத்தை லைகா, டிவோ ஆகிய நிறுவனங்கள் மற்றும் மகாவீர் ஜெயின் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்த குறும்படம் வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குறும்படத்தை பார்வையிட்டனர்.
பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், செயலாளர்கள் கரு.நாகராஜன், கே.டி.ராகவன், இணை பொறுப்பாளர் எம்.ஜெய்சங்கர், மீனவர் அணித்தலைவர் சதீஷ்குமார் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இந்த படத்தை பார்த்தனர்.
நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
இந்த குறும்படம் மூலம் நான் கற்றுக்கொண்ட தகவல் என்னவென்றால், யாருக்காவது நாம் உபயோகமாக இருந்தால், அது நமக்கிடையே கலாசாரமாக மாறும். இந்த குறும்படத்தை தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் காட்டப்பட வேண்டும். குறிப்பாக மாணவர்கள் பார்க்க வேண்டும். இதன் மூலம் எல்லோரும் பயன் பெறலாம்.
ஒரு காலத்தில் அமெரிக்கா தான் வாழ தகுதியான நாடு என்று நினைத்திருந்தோம். இன்றைக்கு இந்தியா தான் வாழ்வதற்கு தகுதியான நாடாக உள்ளது. எங்கெங்கோ சென்றவர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வர ஆரம்பித்துவிட்டார்கள். நம்முடைய நாட்டில் நாம் முன்னேற முடியும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
இன்று உலகம் போற்றுகின்ற ஒரு தலைவர்(பிரதமர் நரேந்திர மோடி) ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படிப்பட்ட கால சூழ்நிலையில் இருந்து வந்திருக்கிறார் என்பதை குறும்படத்தில் வெளிகாட்டி இருக்கிறார்கள்.
ஏழ்மை குடும்பம், படிப்பறிவு இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும் உள்ளத்தில் பாசத்தை வளர்த்துக்கொண்டால் அவரை போன்று வரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் லைகா குருப் ஆப் பொதுமேலாளர் நிசந்தன், டிவோ இயக்குனர் விஸ்வநாதன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் எல்.சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.