பிரதமர் வருகை: திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம்

மத்திய அரசின் திட்ட பணிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று (வியாழக்கிழமை) சென்னை வருகிறார்.
பிரதமர் வருகை: திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம்
Published on

சென்னை,

மத்திய அரசு துறைகள் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று பிரமாண்ட விழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். நேரு ஸ்டேடியத்துக்கு 5.45 மணிக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத்திட்டங்களை அவர் தொடங்கிவைத்து பேசுகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கமாண்டோ படை வீரர்கள், ஆயுதப்படை வீரர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சென்னை விமான நிலையம், ஐ.என்.எஸ். அடையார், நேரு உள்விளையாட்டு அரங்கம் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேரு உள்விளையாட்டு அரங்கம் உள்ள பெரியமேடு பகுதி பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேரு அரங்கம் செல்லும் வழியெங்கும் பாஜகவினர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தொண்டர்களும் அங்கு குவிந்துள்ளனர். அப்போது திமுக தொண்டர்கள் வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா பெரியார் வாழ்கவே, டாக்டர் கலைஞர் வாழ்கவே என முழக்கமிட்டனர்.

பாஜகவினர் பாரத் மாதா கி ஜே என முழக்கமிட்டனர். அதுபோலவே நாளைய முதல்-அமைச்சர் அண்ணாமலை வாழ்க என்றும் பாஜகவினர் முழக்கம் எழுப்பினர். இதனால் திமுக மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி போட்டு கோஷங்களை எழுப்பினர். இதனிடையே கோஷமிட வேண்டாம் என தொண்டர்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.

மேளதாளம், கலை நிகழ்ச்சிகள், பதாகைகள், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com