

கொரோனா தடுப்பூசி
கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் முறையை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வந்த நிலையில், தற்போது 18 முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு தொடங்கி உள்ளது.இந்த நிலையில் 18 முதல் 44 வயதுடையவர்களில் தடுப்பூசி போடுவதில் யாருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்? என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டு இருக்கிறது.அதன்படி, மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அரசு வாங்கி இருக்கும் தடுப்பூசி மருந்துகளுடன் தடுப்பூசி போட பரிந்துரைத்தார். அவருடைய முன்மொழிவை அரசு ஆய்வு செய்தது.
யாருக்கு முன்னுரிமை?
அதன்படி, தடுப்பூசி மருந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து மாநில அரசால் வாங்கப்பட்ட அளவை கருத்தில் கொண்டு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் கீழ்க்கண்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள், அனைத்து மாவட்ட தலைமையக ஆஸ்பத்திரிகள், அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வட்டத்திலும் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:-
* பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர்கள், செய்தித்தாள்களை போடுபவர்கள், பால் விற்பனையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், தெருக்களில் விற்பனை செய்பவர்கள், மருந்தகங்கள் மற்றும் மளிகை கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், பஸ் டிரைவர், கண்டக்டர், மின்வாரிய ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள், மின் வணிகம், அத்தியாவசிய தொழில்கள், கட்டுமான தொழிலாளர்கள், அனைத்து மாநில போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பத்திரிகை மற்றும் ஊடகங்களை சேர்ந்தவர்கள்.
நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
* கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உணவுகள் வழங்கும் தன்னார்வலர்கள், ஆஸ்பத்திரிகளில் உதவி செய்யும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள்.
* கப்பல் தொழில்களில் பணிபுரியும் கடற்படையினர், விமான நிலைய பணியாளர்கள்.
* மாற்றுத்திறனாளி என்ற சான்றிதழ் அளித்தால், அவர்களை வரிசையில் நிறுத்தாமல் தடுப்பூசி போட்டு அனுப்ப வேண்டும்.
மருத்துவ கல்வி இயக்குனர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குனர் மற்றும் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.