

மதுரை,
மேலூர் அருகே கீரனூர் கிராமத்தில் பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பை தட்டி கேட்டதற்காக முத்துராஜா என்பவரை தாக்கியதாக சின்னத்துரை, மகாராஜன் உள்ளிட்டோரை மேலூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைதான இருவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த ஜாமீன் மனுவை மதுரை வன்கொடுமை தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி இருவரும் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த விசாரணையின்போது நீதிபதி புகழேந்தி, அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் தகுதிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டார். திறன், நேர்மை அடிப்படையில அரசு வழக்கறிஞர்களை நியமிக்க வேண்டும், பரிந்துரைகள் உள்ளிட்ட புறக்காரணிகளின் அடிப்படையில அரசு வழக்கறிஞர்களை நியமிக்க கூடாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.