புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம்: உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட்

புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
கைது செய்யப்பட்ட சுதீப்
கைது செய்யப்பட்ட சுதீப்
Published on: 

சென்னை,

புழல் சிறையில் கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக உதவி ஜெயிலர் உட்பட 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

3 அடுக்கு சிறை

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதிகள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தண்டனை கைதிகள் 1,000-க்கும் மேற்பட்டோர், பெண்கள் சிறையில் 150-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். 3 அடுக்கு சிறையில் ராட்சத மதில் சுவர் அமைத்து மின்வேலியும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை சிறையில் நேபாளம் நாட்டை சேர்ந்த சுதீப் (வயது 23) அடைக்கப்பட்டிருந்தார். அவர் சென்னை பாடியில் தங்கி கொண்டு திருட்டில் ஈடுபட்டபோது கடந்த மாதம் ஜெ.ஜெ. நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் அதிர்ச்சி

நேற்று முன்தினம் மாலை அவர் உணவு சாப்பிடுவதற்கு வரவில்லை. அவரை அறையில் தேடி பார்த்த போதும் காணவில்லை. இதை பார்த்து சிறை போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். தேடி பார்த்தும் சுதீப் கிடைக்காததால் புழல் போலீசில் சுதீப் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

சென்னை திருமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது இவர் உணவு சாப்பிட வரவில்லை அறையில் தேடி பார்த்தும் அவர் அங்கு இல்லை. சிறை முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

3 தனிப்படைகள்

இது குறித்தும் புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 தனிப்படைகளை அமைத்து தப்பி ஓடிய 2 கைதிகளை தேடி வந்தனர். புழல் சிறையில் அடுத்தடுத்து கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் புழல் சிறையில் இருந்து தப்பிய இருவரில் நேபாளத்தை சேர்ந்த கைதி சுதீப்பை இன்று போலீசார் கைது செய்தனர். சென்னை திருமங்கலத்தில் சுற்றித் திரிந்த சுதீப்பை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு கைதியான சுரேஷை போலீசார் தேடி வருகின்றனர்

சஸ்பெண்ட்

இந்நிலையில் புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பிய விவகாரத்தில் 6 சிறை காவலர்கள் மற்றும் ஒரு உதவி ஜெயிலர் என 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பணியில் அலட்சியமாக இருந்ததாக சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com