கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது கைதி தப்பியோட்டம்; போலீசார் வலைவீச்சு...!

தஞ்சை அருகே கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோர்ட்டுக்கு அழைத்து சென்ற போது கைதி தப்பியோட்டம்; போலீசார் வலைவீச்சு...!
Published on

தஞ்சை,

நாகை மாவட்டம் நாகூர் பாலக்காடு வடகுடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் தனசேகரன் (வயது 31). இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஒரு வழக்கில் தனசேகரன் கைதாகி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் வழிப்பறி திருட்டு சம்பவம் தொடர்பாக நாகப்பட்டினம் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தனசேகரனை அழைத்து வர நேற்று நாகப்பட்டினத்தில் இருந்து ஒரு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் போலீஸ் வாகனத்தில் கோபிச்செட்டிப்பாளையம் சென்றனர்.

பின்னர் நேற்று இரவு 11 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் கிளை சிறையில் இருந்து கைதி தனசேகரனை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்திற்கு புறப்பட்டனர்.

இந்நிலையில், இன்று தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பஸ் நிறுத்தம் பகுதியில் போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி உள்ளார். போலீஸ் வாகனத்தை ஓட்டி வந்த டிரைவருடன் மற்றொரு போலீசார் இயற்க்கை உபாதை கழிக்க சென்றுள்ளார்.

அப்போது போலீஸ் வாகனத்தில் இருந்த இரண்டு போலீசார் தூங்கி கொண்டிருந்ததாக தெரிகிறது. கைதி தனசேகரன் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீஸ் பிடியிலிருந்து கை விலங்கோடு தப்பியோடி விட்டார்.

இதைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழித்து விட்டு வந்த போலீசார் போலீஸ் வாகனத்தில் கைதி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வளம்பக்குடி கிராம மக்களுடன் இணைந்து தப்பி ஓடிய கைதி தனசேகரனை சுற்று வட்டார பகுதிகளில் போலீசார் தேடினர்.

ஆனால் கைதி தனசேகரன் சிக்கவில்லை. இது குறித்து செங்கிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தப்பியோடிய கைதி தனசேகரனை தனிப்படைகள் அமைத்து வலைவீசிதேடி வருகின்றனர்

தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் வாகனத்தில் இருந்து கைதி கைவிலங்கோடு தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com