

நெல்லை,
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதால் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே உள்ள அம்மன் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மகன் சங்கரலிங்கம் (வயது 27). இவருடைய மனைவி பவித்ரா. சங்கரலிங்கம் மீது 4 கொலை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 10-ந் தேதி கஞ்சா விற்பனை செய்ததாக சங்கரலிங்கத்தை முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர், அவரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், கால் முறிவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று மதியம் சங்கரலிங்கம் அங்குள்ள குளியல் அறையில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றார். குளிக்க சென்ற சங்கரலிங்கம் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. பின்னர், அதே வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மற்றொரு கைதி, குளியல் அறைக்கு தேடிச் சென்றார்.
அப்போது அந்த குளியலறையில் உள்ள ஒரு கம்பியில் சங்கரலிங்கம் தனது லுங்கியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே, இது குறித்து அங்கிருந்த போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று சங்கரலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மரணத்தில் மர்மம் இருப்பதாக சங்கரலிங்கத்தின் உடலை வாங்க மறுத்து அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கால்முறிவு ஏற்பட்ட நபர் எப்படி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடியும்? என்று கேள்வி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.