நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்: 2 போலீஸ் ஏட்டுகள் பணி இடைநீக்கம்

அலெக்ஸ் சாம்ராஜ் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறியதால், போலிசார் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி சிக்கினார்: 2 போலீஸ் ஏட்டுகள் பணி இடைநீக்கம்
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா பரப்பாடி பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் சாம்ராஜ் (வயது 30). இவர் அந்த பகுதியில் தகராறு செய்த வழக்கில் விஜயநாராயணம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். நேற்று முன்தினம் காலையில் அவரை, போலீஸ் ஏட்டுகள் முத்துராமலிங்கம், லட்சுமணன் ஆகிய 2 பேரும் நெல்லை அருகே பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து வந்தனர்.

பின்னர், வரும் வழியில் அலெக்ஸ் சாம்ராஜ் தனக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறியதால், போலிசார் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அலெக்ஸ் சாம்ராஜ் மதிய நேரத்தில் போலீசாருக்கு தெரியாமல் நைசாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

சிறிது நேரத்தில் கைதியை காணாமல் அதிர்ச்சியடைந்த போலிசார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதியை வலைவீசி தேடி வந்தனர்.

இங்கிருந்து தப்பி ஓடிய அலெக்ஸ் சாம்ராஜ் மதுரையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் நேற்று நெல்லைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தது தெரியவந்தது. உஷாரான போலீசார் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தயாராக காத்து நின்றனர். குறிப்பிட்ட பஸ்சில் இருந்து அலெக்ஸ் சாம்ராஜ் இறங்கியபோது அவரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் சிறையில் அடைக்க கொண்டுவந்த கைதியை முறையாக கவனிக்காமல், பணியில் அஜாக்கிரதையாக செயல்பட்ட போலீஸ் ஏட்டுகள் முத்துராமலிங்கம், லட்சுமணன் ஆகிய 2 பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் பிறப்பித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com