

தேனி,
தேனியில் சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை அமைந்துள்ளது. இங்கு விசாரணை கைதிகள் அடைக்கப்படுகின்றனர். 24 மணி நேரமும் சிறைக் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இந்த சிறையில் கைதிகள் சிலர் குழுவாக சேர்ந்து சிறைக் காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அவ்வாறு தாக்கிவிட்டு 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறைக் காவலர்கள் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.எஸ்.பிரவீன்கவுதம் உத்தரவின்பேரில், தேக்கம்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தப்பி ஓடிய கைதிகளை பிடிக்க மாவட்டம் முழுவதும் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் முதற்கட்டமாக தப்பியோடிய கைதிகளில் ஒருவரான பிரவீன் என்பவரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர். அதனை தொடர்ந்து இன்று காலை ராஜா சிக்கந்தர், சிலம்பரசன், ராஜ்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். 17 பேரில் எஞ்சிய 13 கைதிகளை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க முதலில் 17 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்து, தற்போது இந்த விவகாரம் பூதகரமாக வெடித்துள்ளதையடுத்து தனிப்படைகள் 25 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 6 டிஎஸ்பி, 20 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் கிராம கிராமமாக தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேருந்து நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தப்பியோடியவர்களில் பலர் மதுரை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என வெளியாகியுள்ள தகவலையடுத்து, அந்த மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.