மகனை காப்பாற்ற முயன்றபோது தேனீக்கள் கொட்டியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

விடுமுறையையொட்டி வினோத்குமார், தனது மனைவி மற்றும் மகனுடன் சொந்த ஊருக்கு வந்து உள்ளனர்.
மகனை காப்பாற்ற முயன்றபோது தேனீக்கள் கொட்டியதில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள அவ்வைநகர் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 42). இவர், சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சண்முகபிரியா (39). இவர்களது மகன் சித்தார்த் குகன் (9). இவர்கள் விடுமுறையையொட்டி சொந்த ஊருக்கு வந்து உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பு திருப்பத்தூர் அருகே குனிச்சி மோட்டூர் பகுதியில் உள்ளது. இந்த மாந்தோப்பிற்கு வினோத்குமார், தனது மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். அப்போது மாந்தோப்பில் இருந்த தேனீக்கள் சிறுவன் சித்தார்த் குகனை கொட்டி உள்ளது.

இதனை பார்த்த வினோத்குமார், சண்முகப்பிரியா ஆகியோர் மகனை மீட்க முயற்சி செய்து உள்ளனர். அப்போது 3 பேரையும் தேனீக்கள் கொட்டியது. இதில் காயமடைந்த 3 பேரும் மயங்கி விழுந்தனர். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் தேனீக்களை விரட்டிவிட்டு 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வினோத்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சண்முகப்பிரியா, சித்தார்த் குகன் ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com