

செங்குன்றம்,
சென்னை செங்குன்றம் அருகே மேட்டுப்பாளையத்தில் பசுமை தாயகம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் அப்பகுதி பொதுமக்களிடம் குறை கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு, பொதுமக்களிடம் குறைகள் கேட்டார்.
பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-
நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது. இதை பற்றி எல்லாம் கவலைப்படாத எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் சொந்த பிரச்சினைக்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார்கள். மக்கள் பிரச்சினைக்காக அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆவின் பால் நிறுவனத்தில் நடந்த கலப்படம், ஊழல் பற்றி யோசிக்காத அமைச்சர், தனியார் பால் நிறுவனங்கள் பற்றி பேசி வருகிறார். அப்படி தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஸ்டாலின் நாடகம்
எனது நண்பர் மு.க.ஸ்டாலின், தமிழகம் முழுவதும் உள்ள குளங்களை தூர்வாரும் பணியை செய்து வருகிறார். தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 42 ஆயிரம் ஏரி, குளங்கள் இருந்தன. தற்போது 37 ஆயிரம் ஏரி, குளங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக சென்னையில் 270 ஏரிகள் காணாமல் போய்விட்டன.
கோயம்பேடு பஸ் நிலையம், நேரு உள் விளையாட்டு அரங்கம், வள்ளுவர் கோட்டம் இவையெல்லாம் ஏரிகளில் கட்டப்பட்டவை என ஸ்டாலினுக்கு தெரியாதா?. தமிழகத்தில் உள்ள பாதி மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் ஏரிகளில் கட்டப்பட்டவை என அவருக்கு தெரியாதா?. குளத்தை தூர்வாருகிறோம் என ஸ்டாலின் நாடகம் நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சியை மக்கள் கேலி கூத்தாக பார்த்து வருகிறார்கள் என்பது உண்மை. விரைவில், மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் மாநில துணை பொதுச்செயலாளர் கே.என்.சேகர், மாவட்ட செயலாளர் ஞானபிரகாசம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.