தமிழகத்தில் தனியார் பால் விற்பனை விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

கோடை காலம் தொடங்கும் முன்பே பால் உற்பத்தியில் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில் தனியார் பால் விற்பனை விலை திடீர் உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி
Published on

சென்னை,

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின், அண்டை மாநிலமான கர்நாடகா அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான நந்தினியிடம் பால் வாங்கி சமாளித்து வருவதாக கூறப்படுகிறது.

பால் உற்பத்தி பாதிப்பால் சுதாரித்துக்கொண்ட தனியார் பால் நிறுவனங்கள், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.14 என்ற வகையில் உயர்த்தி வழங்கி வருகின்றன. அதனால் ஏற்படும் இழப்பை சரிகட்டவும் உடனடியாக பால் விலையை உயர்த்திவிட்டன.

லிட்டருக்கு ரூ.2 உயர்வு

தமிழ்நாட்டின் முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்யா, பால் மற்றும் தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்திய நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மற்ற தனியார் பால் நிறுவனங்களும், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனங்களும் பால் மற்றும் தயிர் உள்ளிட்ட பால் பொருட்களின் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி வருகின்றன.

இதன் காரணமாக, கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் 1லிட்டர் ரூ.76-ல் இருந்து ரூ.78 ஆகவும், டீ ஸ்பெஷல் பால் ரூ.68-ல் இருந்து ரூ.70 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.66-ல் இருந்து ரூ.68 ஆகவும், சமன்படுத்தப்பட்ட பால் ரூ.60-ல் இருந்து ரூ.62 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் ரூ.48-ல் இருந்து ரூ.50 ஆகவும், விலை உயர்ந்துள்ளது.

பால் உற்பத்தி மேலும் பாதிக்கும் அபாயம்

இதேபோல், சமன்படுத்தப்பட்ட தயிர் 1 கிலோ ரூ.74-ல் இருந்து ரூ.76 ஆகவும், 450 கிராம் தயிர் ரூ.38-ல் இருந்து ரூ.40 ஆகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் 1 கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.72 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கும் முன்பே பால் உற்பத்தியில் இவ்வாறு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், ஏப்ரல், மே மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசின் பால் வளத்துறை உடனடியாக பால் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் சு.ஆ.பொன்னுசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com