

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், விலங்குகள் நல ஆர்வலர் எஸ்.முரளிதரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கும், கோவில் யானைகளுக்கும் சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தலைமை வனப்பாதுகாவலர் அனுமதி வழங்கியுள்ளார்.
வனத்துறையில் தகுதியான கால்நடை டாக்டர்கள், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள நிலையில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்க வேண்டிய அவசியம் என்ன? என்பதை தலைமை வனப்பாதுகாவலர் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள யானைகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் தொண்டு நிறுவனங்களை பணியமர்த்தக்கூடாது. இந்த மனுவுக்கு வருகிற 31-ந்தேதிக்குள் வனத்துறை பதில் அளிக்கவேண்டும்" என்று உத்தரவிட்டுள்ளது.