போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? அண்ணாமலை கண்டனம்

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கழகங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதா? அண்ணாமலை கண்டனம்
Published on

சென்னை,

போக்குவரத்து கழகத்தில் தொடர்ந்து ஏற்பட்டு கொண்டிருக்கும் பொருளாதார இழப்பில் இருந்து மீட்பதற்காக அதை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. முதல் கட்டமாக ஆயிரம் பஸ்களை தனியாருக்கு மாற்றம் செய்ய முடிவெடுத்து இருக்கும் தமிழக அரசு, பின்னர் படிப்படியாக அனைத்து பஸ்களையும் தனியார் வசம் ஒப்படைக்கும் மனநிலையில் இருக்கிறது.

அரசு நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தி.மு.க.வினரும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக விழிப்புணர்வாளர்களும் தற்போது ஓய்வு நிலையில் இருப்பதால், இதுபற்றி யாரும் வாய் திறக்கவில்லை. மக்கள் சேவையை முதல் நோக்கமாக கொண்டு இயங்கிகொண்டிருக்கும் போக்குவரத்து கழகத்தை தனியார் வசம் ஒப்படைப்பது என்பது, இந்த துறையை முற்றிலும் அழிப்பதற்கு சமம் என்று தி.மு.க. தவிர்த்த அனைத்து தொழிற்சங்கங்களும் அரசின் முடிவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

மறுபரிசீலனை

மக்களுக்கு நேரடியாக தொண்டுகளை செய்யவேண்டிய அரசு, லாப நோக்கம் கருதாமல் இயங்கவேண்டிய பொது நிறுவனங்களை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டால், பிறகு அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லப்போவது யார்?. உதாரணமாக போலீசாருக்கும், மாணவர்களுக்கும் முற்றிலும் இலவசம் என்று அறிவித்துவிட்டு, தனியாருக்கு தாரைவார்த்த பிறகு அவர்களுக்கான இலவச பயண திட்டத்தை தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?.

ஒருவேளை இலவசங்கள் தனியார் பஸ்சிலும் தொடருமானால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு தனியாருக்கு தருமா?. தொலைநோக்கு பார்வை இல்லாமல் தடாலடி முடிவுகளை எடுத்துவிட்டு தடுமாறும் வழக்கத்தை இன்னமும் தமிழக அரசு கைவிடவில்லை. அடித்தட்டு மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் அத்தியாவசிய நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com