

பழனி,
பழனி வருவாய் கோட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், குஜிலியம் பாறை ஆகிய 4 தாலுகாக்கள் உள்ளன. எனவே மாவட்டத்தில் பழனி சப்-கலெக்டர் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்.
இந்நிலையில் பழனி சப்-கலெக்டராக பணியாற்றி வந்த கண்ணன், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பில் சென்றார்.
இதனால் சப்-கலெக்டர் பணியிடம் காலியாக இருந்தது. இதன் காரணமாக பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்த பொதுமக்கள், மனுக்களை வழங்க முடியாமல் திரும்பி சென்றனர். எனவே காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்ட துணை கலெக்டராக (பயிற்சி) பணியாற்றி வந்த பிரியங்கா, பழனி சப்-கலெக்டராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று பழனி சப்-கலெக்டர் அலுவலகத்தில் அவர் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர் தாசில்தார்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.