

கருங்கல்,
நிறுத்தப்பட்ட தேங்காப்பட்டண மீன்பிடி துறைமுக பணியை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.
முதல்-அமைச்சரிடம் மனு
குமரி மாவட்டத்துக்கு வந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுக கட்டமைப்பு சரியாக அமைக்கப்படாததால் ஏற்பட்ட விபத்துகளால் ஏராளமான மீனவ மக்கள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் மூன்று கட்டங்களாக ரூ.253 கோடிக்கான அரசாணைபிறப்பித்து, ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
திடீரென இந்தப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் மாதம் முதல் கடல் சீற்றம் தொடங்கும். அதன் பிறகு பணிகள் மேற்கொள்ள இயலாது. எனவே கடல் சீற்றம் தொடங்குவதற்கு முன் இந்தப்பணிகளை தங்கு தடையின்றி நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.
பட்டணங்கால்வாய் கிளை கால்வாய்களை தூர்வாரி கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று சேர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்படுத்த வேண்டும்
இரையுமன்துறை, இனையம்புத்தன்துறை, குறும்பனை மீனவ கிராமங்களை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க இரையுமன்துறை கிராமம் (மேற்கு பகுதி) மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும். தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகம் இரையுமன்துறை பகுதியில் தாழ்நிலை படகு அணையும் தளம் அமைக்க வேண்டும். இனையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த வேண்டும். மேலக்குறும்பனை கிராமத்தில் அமைந்துள்ள மீன் இறங்குதளத்தை மேம்படுத்த வேண்டும்.
புதுக்கடை பரசேரி மாநில நெடுஞ்சாலையில் பதிக்கப்பட்டுள்ள சுனாமி கூட்டுகுடிநீர் திட்ட காங்கிரீட் குழாய்களால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க காங்கிரீட் குழாய்களுக்கு பதிலாக டி.ஐ. பைப்புகளை சாலையின் ஓரமாக அமைக்க வேண்டும்.
தாலுகா ஆஸ்பத்திரி
கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கிள்ளியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்த வேண்டும். குறும்பனை மீனவ கிராமத்தை தனி கிராம ஊராட்சியாக அறிவிக்க வேண்டும்.
ஒரு தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் இருக்கவேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
கருங்கல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். கருங்கல் பஸ் நிலையத்தை நவீனமயமாக்கி விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.