அனுமதியின்றி ஊர்வலம்: மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு - சென்னை போலீசார் நடவடிக்கை

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஊர்வலம் நடத்தின. இதுதொடர்பாக அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்பட 8 ஆயிரம் பேர் மீது சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அனுமதியின்றி ஊர்வலம்: மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ உள்பட 8 ஆயிரம் பேர் மீது வழக்கு - சென்னை போலீசார் நடவடிக்கை
Published on

சென்னை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசு அதனை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியும் பேரணி நடத்த தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பேரணி நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதனால் தடையை மீறி பேரணி நடை பெறும் என்றும் அறிவிக் கப்பட்டது. அதன்படி இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலம் சென்னை எழும்பூர் தாளமுத்து நடராஜன் மாளிகை அருகில் இருந்து புறப்பட்டு ராஜரத்தினம் மைதானத்தை அடைந்தது.

இந்த ஊர்வலத்தில் மு.க. ஸ்டாலினுடன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் கனிமொழி, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், திருச்சி சிவா உள்ளிட்ட தி.மு.க.வினரும், முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

ராஜரத்தினம் மைதானத்தை ஊர்வலம் அடைந்ததும் கூட்டணி தலைவர்கள் அங்கு போடப்பட்டு இருந்த மேடையில் நின்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்த ஊர்வலத்தையொட்டி பாதுகாப்பு பணியில் சுமார் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக ஊர்வல பாதையில் வஜ்ரா வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. ஆளில்லா குட்டி விமானங்கள் (டிரோன்), நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது.

அதோடு இந்த ஊர்வலம் முழுவதும் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது. ஊர்வலம் முடிவடைந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த ஊர்வலம் போலீஸ் அனுமதியின்றி நடைபெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீஸ் அனுமதியின்றி ஊர்வலத்தில் சென்ற மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரம், வைகோ, கி.வீரமணி, கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன், காதர் மொய்தீன் உள்பட சுமார் 8 ஆயிரம் பேர் மீது எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இ.பி.கோ. 143 (சட்டவிரோதமாக கூடுதல்), இ.பி.கோ. 188 (தடையை மீறி செல்லுதல்), இ.பி.கோ. 341 (பொது மக்களுக்கு இடையூறு விளைவித்தல்), சென்னை போலீஸ் 41(6) சட்டம் (தடையை மீறுதல்) ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com