

சென்னை,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை நிராகரிக்க கோரி தயாரிப்பாளர் கேயார் தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சங்கத் தேர்தல்
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்தும் அதிகாரியாக, ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரனை நியமித்து, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த தேர்தலில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் நடிகர் விஷால் உள்பட பலர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்புமனுக்களையும் அவர்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வேட்புமனுக்களை தேர்தல் அதிகாரியான நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்றுக்கொண்டார்.
வேட்புமனு
இந்த நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் ஏற்றுக்கொண்டது சட்டப்படி செல்லாது. தயாரிப்பாளர் சங்க விதிகளின்படி, வேறு ஒரு சங்கத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தலுக்கு போட்டியிட முடியாது. எனவே, விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடவேண்டும் என்று தமிழ் திரைப்படம் தயாரிப்பாளர் கேயார், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது.
சரியான முடிவு
அப்போது விஷால் தரப்பு வக்கீல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் பிற சங்கத்தில் நிர்வாகியாக இருப்பவர்கள் போட்டியிடக்கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை என்று கூறி வாதிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விஷால் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் விதிகளுக்கு உட்பட்டு தான் தேர்தல் அதிகாரியான நீதிபதி ராஜேஸ்வரன் ஏற்றுக்கொண்டுள்ளார். இதில் எந்த விதிமுறைகளும் மீறப்படவில்லை. வேட்புமனுவை ஏற்றுக்கொண்டது சரியான முடிவுதான். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டுள்ளார்.