தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஒத்தி வைக்கவேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்
Published on

சென்னை,

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஜூன் 30-ந் தேதிக்குள் நடத்தவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிட பலமுனை போட்டி உருவாகியுள்ளதாக நான் அறிகிறேன். என்னை பொறுத்தவரை கலையுலகம் ஒற்றுமையாக இருக்கவேண்டும், அது நடிகர் சங்கமாக இருக்கட்டும், தயாரிப்பாளர் சங்கமாக இருக்கட்டும், வினியோகஸ்தர்கள் சங்கமாக இருக்கட்டும், ஒற்றுமையுடன் செயல்படுவதையே விரும்புவேன். தயாரிப்பாளர் சங்கத்தில் அனைவரும் ஒரு அணியில் திரண்டு போட்டியின்றி சங்க நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஆனால், தற்போது உலகளவிலும், தேசிய அளவிலும், தமிழகத்திலும் பரவும் கொரோனா நோய்த்தொற்று இதுவரை உலகம் காணாத அளவில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நோய்த்தொற்று மக்களிடையே பரவாமல் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மத்திய-மாநில அரசுகள் முழுவீச்சாக செயல்படும் இன்றைய அசாதாரண சூழலில், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்துவது அவசியமா? என்றுதான் எனக்கு எண்ண தோன்றுகிறது.

நாடு இயல்பு நிலைக்கு திரும்பட்டும். கொரோனா வைரஸ் தாக்குதல் கட்டுப்பாட்டுக்குள் வரட்டும். மீண்டும் படப்பிடிப்புகள், திரையிடல்கள் தொடங்கட்டும். அதுவரை அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுக்கும், வழிகாட்டுதல்களுக்கும் ஒத்துழைப்பு தருவோம். மக்கள் மனதில் நம்பிக்கை அளித்து, அமைதியான சீரான வாழ்வு திரும்ப வழிசெய்வோம். நீதிமன்றம் தேர்தலை அறிவித்திருந்தாலும், தற்போதைய தமிழகத்தின் அசாதாரணமான சூழலை கருதி, மனிதாபிமான அடிப்படையில் தயாரிப்பாளர் சங்க தேர்தலை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com