அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது; மத்திய மந்திரி குற்றச்சாட்டுக்கு சக்கரபாணி பதிலடி

நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே பொருட்கள் தரமில்லை என கூறியிருப்பது வருத்தம் அளிப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது; மத்திய மந்திரி குற்றச்சாட்டுக்கு சக்கரபாணி பதிலடி
Published on

சென்னை,

சென்னை, மடிப்பாக்கத்தில் மத்திய அரசின் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு தரமான அரிசியை அளித்தாலும் , திமுக அரசு தரமற்ற அரிசியை மக்களுக்கு வழங்குகிறது என குற்றம் சுமத்தினார்.

மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் வகையில் அமைச்சர் சக்கரபாணி நிருபர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, "இன்று காலை மத்திய மந்திரி பியூஸ் கோயல், நாங்கள் தரமான அரிசியை தருகிறோம், மாநிலத்தில் தரமில்லாத அரிசி தருவதாக குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர்கள் கொடுப்பதே, எப்படி தரமில்லாததாகப் போகும்.

12 அரிசி ஆலைகள் மூலம் தரமான அரிசியை, அரசு வழங்கி வருகிறது. 4 அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னரே பொருட்கள் நியாயவிலை கடைகளுக்கு செல்கிறது. பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.

டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தின் நியாயவிலை கடைகள் வடிவமைப்பை மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாராட்டியிருந்தார். கடந்த செப்டம்பர் மாதம், சென்னை தியாகராய நகரில் நியாயவிலை கடைகளை ஆய்வு செய்த மத்திய மந்திரிஅஸ்வினி குமார் செளபே, உணவுப்பொருட்கள் தரமாக வழங்கப்படுவதாக கூறினார்.

நியாயவிலை கடைக்கு சென்று ஆய்வு செய்யாமலேயே, பொருளைப் பார்க்காமலேயே தரமில்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com