பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பான வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளரான கணேசன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியையாக வேலை செய்த நிர்மலாதேவி, உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்கும்படி சில மாணவிகளை வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பதிவான வழக்கை தற்போது சி.பி.சி. ஐ.டி. போலீசார் விசாரிக்கின்றனர். இதையடுத்து, சி.பி.சி. ஐ.டி. உயர் போலீஸ் அதிகாரி, திடீரென இடம்மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், போலீசார் விசாரணை நடத்தி வரும்போது, நிர்மலாதேவி விவகாரம் குறித்து, விசாரணை நடத்த ஒரு குழுவை மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

அதேபோல, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் ஒரு விசாரணை குழுவை அமைத்து தமிழக கவர்னர் உத்தரவிட்டுள்ளார். ஒரு குற்றசம்பவத்துக்கு 3 விதமான விசாரணை நடத்துவது சரியாக இருக்காது.

பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான ஒரு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து, நிர்மலாதேவி விவகாரம் குறித்து புலன்விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணை குழுவின் அறிக்கையை வெளியிடக்கூடாது என்று ஏற்கனவே இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, இந்த வழக்கிற்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யவில்லை. வேண்டும் என்றே புலன் விசாரணையை தாமதப்படுத்தி வருகின்றனர் என்று கூறினார்.

அதற்கு, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.எச்.அரவிந்த்பாண்டியன், சி.பி.சி.ஐ.டி. புலன்விசாரணை சரியான கோணத்தில் நடக்கிறது. அந்த விசாரணை முடிவடையவில்லை. அதனால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை. ஐகோர்ட்டின் உத்தரவின்படி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கை வெளியிடப்படாமல் பத்திரமாக உள்ளது என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை 2 வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும். சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையையும், சீலிட்டு வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com