

திருச்சி,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே, கொடுத்த கடனைத் திரும்பக் கேட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி பெண் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் பாலத்தின் அடியில் வீசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக தம்பதியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கீரம்பூரைச் சேர்ந்தவர் சுகன்யா (வயது 36). இவர் கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில், துறையூர் அருகே காளிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். அத்துடன் பகுதி நேரமாக தனக்குத் தெரிந்தவர்களுக்கு வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும், சீட்டு நடத்தியும் வந்துள்ளார்.
துறையூர் கண்ணனூர் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சுமதி - துரைராஜ் தம்பதியினருக்கு சுகன்யா பணம் கடன் கொடுத்திருந்தார். இதையடுத்து கடந்த 20-ந்தேதி, கொடுத்த கடனையும் சீட்டுப் பணத்தையும் வசூலிப்பதற்காக சுமதி - துரைராஜ் வீட்டிற்கு சுகன்யா சென்றுள்ளார். அங்கு அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தம்பதியினர், சுகன்யாவை இரும்பு கம்பியால் தாக்கி, கழுத்தை நெரித்து கொடூரமாகக் கொலை செய்தனர். பின்னர், கொலையை மறைப்பதற்காக அவரது சடலத்தை கரட்டாம்பட்டி அருகே உள்ள ஒரு பாலத்தின் அடியில் வீசிவிட்டுத் தப்பியோடினர்.
சுகன்யா வீடு திரும்பாததால் பதற்றமடைந்த அவரது தந்தை மனோகரன் போலீசில் புகார் அளித்தார். இதற்கிடையே, கடந்த 24-ந்தேதி அன்று கரட்டாம்பட்டி பாலத்தின் அடியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அப்பகுதி மக்கள் புலிவலம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் கிடந்த சுகன்யாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்கிடமான சுமதி - துரைராஜ் தம்பதியினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கடனைத் திரும்பக் கேட்டதால் சுமதி மற்றும் அவரது கணவர் துரைராஜ் ஆகிய இருவருமே சுகன்யாவைக் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் புலிவலம் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இக்கொலை வழக்கில் காவல்துறையின் அலட்சியமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுகன்யா காணாமல் போன அன்றே அவரது தந்தை துறையூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கச் சென்றுள்ளார். ஆனால், அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) தினேஷ் "எல்லைப் பிரச்சனை" எனக் கூறி புகாரைப் பெறாமல் அலட்சியமாக அலைக்கழித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் ஒருவேளை சுகன்யாவை உயிருடன் மீட்டிருக்கலாம் என பொதுமக்கள் தரப்பில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கடமை தவறிய துறையூர் காவல் உதவி ஆய்வாளர் தினேஷை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இச்சம்பவம் துறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.