புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்

விலை உயர்வை கட்டுப்படுத்த புழுங்கல் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும்
Published on

கொரடாச்சேரி;

விலை உயர்வை கட்டுப்படுத்த புழுங்கல் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என்று ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விலை உயர்வு

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே அம்மையப்பனில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் முகமது மீரான் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் புழுங்கல் அரிசியின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புழுங்கல் அரிசி விலை கடந்த ஒரு மாதத்தில் கிலோவுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. மத்திய அரசு அரிசி ஏற்றுமதிக்கு தடைவிதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தாலும், பச்சரிசிக்கு மட்டுமே தடை விதித்துள்ளது.புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை. நாடு முழுவதும் இயற்கை சீற்றம் காரணமாகவும், அறுவடை நேரங்களில் மழை பெய்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியதாலும், இந்தியா முழுவதும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடை விதிக்காமல், புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என அனுமதிப்பது முரண்பாடாக உள்ளது.

பயன் இல்லை

குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் உணவுக்காக புழுங்கல் அரிசியை அதிக அளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கும் இடைத்தரகர்கள் புழுங்கல் அரிசிக்கு செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவதன் மூலம், புழுங்கல் அரிசி விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.இதனால் விவசாயிகளுக்கும் அரவை செய்யும் அரவை மில் உரிமையாளர்களுக்கும் எவ்வித பயனும் இல்லை. மாறாக பொதுமக்கள் தான் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூ.15 வரை விலை உயர்ந்து உள்ளது. எனவே மத்திய - மாநில அரசுகள் இணைந்து புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com