தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க நடவடிக்கை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு

இந்தியாவில் மதுப்பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பா.ம.க. நடவடிக்கை எடுக்கும் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க நடவடிக்கை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
Published on

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் அதிகரித்து வரும் மதுப்பழக்கம் குறித்து லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியும், கவலையும் அளிப்பவையாக உள்ளன. இந்தியாவில் தேசிய அளவில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதையே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

தமிழ்நாட்டில் மதுவிலக்குக்காக போராடி வரும் நிலைமை மாறி, நாடு முழுவதிலும் மதுவிலக்குக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதைத் தான் லான்செட் இதழ் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. நாடு முழுவதிலும் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த ஆட்சியாளர்கள் தயாராக இருந்தும், அதற்கு தடையாக இருப்பது மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான். அதனால் தான் மது விலக்கை நடைமுறைப்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில் மானியங்களை வழங்குதல், வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை அதிகரித்தல் ஆகியவற்றின் மூலமாவது மதுவிலக்கை கொண்டுவர வேண்டும் என பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

மத்தியில் மீண்டும் அமையவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் இவற்றை மீண்டும் வலியுறுத்தி, தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை உருவாக்க பா.ம.க. நடவடிக்கை மேற்கொள்ளும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com