கோவில் நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்ற தடை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

கோவில் நிலங்களை வேறு துறைக்கு மாற்ற தடை விதித்த தனி நீதிபதி தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அமர்வு உறுதி செய்துள்ளது.
கோவில் நிலங்களை வேறு துறைகளுக்கு மாற்ற தடை - ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னை சின்ன நீலாங்கரையில் உள்ள சக்தி முத்தம்மன் கோவிலுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலம் இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல் 1963-ம் ஆண்டு மீன்வளத் துறைக்கு மாற்றபட்டிருக்கிறது. அங்கு சிறிய பகுதியில் ஐஸ் உற்பத்தி நிலையம் மற்றும் மீன்களை பாதுகாப்பதற்கான கட்டடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன.

அதேபோல, சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்குச் சொந்தமான 1 ஏக்கர் 15 சென்ட் அளவிலான நிலத்தை 2018-ம் ஆண்டு அறநிலையத் துறையின் அனுமதி இல்லாமல், போக்குவரத்து துறைக்கு மாற்றப்பட்டு, அங்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

தமிழக அரசின் இந்த உத்தரவுகளை எதிர்த்து கோவில் நிர்வாகங்களின் சார்பிலும், பக்தர்கள் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன், அறநிலையத் துறை கோவில்களின் நிலங்களை கோவில் அல்லாத பிற பயன்பாடுகளுக்கு மாற்றக் கூடாது என்று கூறி, அரசின் உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு கோவில்களுக்கு சொந்தமான நிலத்தை அவற்றின் பயன்பாடுகளுக்குத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, பிற பயன்பாட்டுக்கு அதை பயன்படுத்தக்கூடாது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறு இல்லை. எனவே, அற நிலையத்துறை அனுமதி இல்லாமல் நிலத்தை மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டது சரிதான் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கோவில்களின் நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைகளை தொடங்க உத்தரவிட்டு, அரசின் மேல்முறையீட்டு வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com