மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை நிறுவும் திட்டம் - கடலுக்குள் சென்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

மீன்வளத்தை பெருக்குவதற்காக செயற்கை பவளப்பாறை நிறுவும் திட்டத்தை அமைச்சர் டி.ஜெயக்குமார் கடலுக்குள் சென்று தொடங்கி வைத்தார்.
மீன்வளத்தை பெருக்க செயற்கை பவளப்பாறை நிறுவும் திட்டம் - கடலுக்குள் சென்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 28-ந்தேதி 2 கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனால், சென்னை, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன்வளம் பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்து மீனவர் நலனை மேம்படுத்திட ரூ.10 கோடி மதிப்பீட்டில் 30 இடங்களில் செயற்கை பவளப்பாறைகளை நிறுவி மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று 2019-20-ம் வருட சட்டசபை கூட்டத்தொடரில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அறிவித்தார்.

அதன்படி, கான்கிரீட்டால் ஆன முக்கோணம், வளையம் மற்றும் வளைய தொகுப்புகள் ஆகிய 3 வடிவங்களில் செயற்கை பவளப்பாறை உருவாக்கப்பட்டு மீன் உறைவிடங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை கடலில் நிறுவும் நிகழ்ச்சி ஊரூர்குப்பம், ஆல்காட்டுகுப்பம், ஓடைக்குப்பம் ஆகிய கிராமங்களில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரம் படகில் சென்று தொடங்கி வைத்தார். இதில், மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஆறுமுகம், உதவி இயக்குனர் வேலன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அண்மை கடல் பகுதிகளில் முன்பு மீன்கள் அதிக அளவில் காணப்பட்டது. இப்போது, அண்மை கடல் பகுதிகளில் மீன்கள் இனம் குறைந்து வருகிறது. ஆழ்கடல் பகுதியில் 200 ஆண்டுகளுக்கு தேவையான மீன்வளம் இருக்கும் நிலையில், விசைப்படகுகள் வழங்கி ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கிறோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மாநில திட்டம் ஒன்றை கொண்டு வந்து அதில் 60 லட்சம் ரூபாய் விசை படகிற்கு, 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கினார்.

தற்போது தமிழகம் மீன் உற்பத்தியில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி, 7.75 லட்சம் டன் மீன் உற்பத்தியுடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது. அண்மை கடல் மீன் வளத்தை பெருக்குவதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் முயற்சியில் மாநில அரசு சார்பில் கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் முழுமையான அளவில் பவளப்பாறைகள் மீனவர்களின் கருத்து அறிந்து நிறுவப்படுகிறது.

செயற்கை பவளப்பாறைகளில் பாசி படரும்போது, பாறை மீன், கொடுவா மீன் போன்ற மீன்கள் அதிகரிக்கும். இதனால், அண்மை கடல் பகுதி மீன் பிடிப்பால் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com