மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் நேரில் ஆய்வு

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்ரூ.1.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

மத்தூர்

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 13 லட்சத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வளர்ச்சி திட்ட பணிகள்

மத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணன்டஅள்ளி, கெரிகேப்பள்ளி, சாலமரத்துப்பட்டி ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் ரூ.1 கோடியே 13 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் சாலை பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளையும், கண்ணன்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும் கலெக்டர் சரயு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அத்திகானூர் கிராமத்தில் மழைநீர் சேகரிக்கும் பொருட்டு சம உயர வரப்பு அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அங்கு பணியாளர்களின் வருகை, பதிவேடு, வேலை வழங்கப்பட்ட நாட்கள், ஊதியம் வழங்கப்பட்ட விவரங்களை பார்வையிட்டார். மேலும் பதிவேடுகளை சரியாக பராமரிக்க பணிதள பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து ரூ.7 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் செங்குத்து உறிஞ்சிக்குழியுடன் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை பார்வையிட்டு கால்வாயின் நீளம் அகலம் மற்றும் உறுதி தன்மையை ஆய்வு செய்தார்.

தொடக்கப்பள்ளியில் ஆய்வு

தொடர்ந்து கூச்சூர், தோலனூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு பைப்லைன் அமைக்கும் பணிகள், மின் இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் கூச்சூர் ராஜீவ் நகர் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.7 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டிட கட்டுமான பணிகளை கலெக்டர் பார்வையிட்டு கூடுதல் தரத்துடன் பணிகளை முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டை மற்றும் உணவை ஆய்வு செய்து போதிய அளவு உணவு வழங்கப்படுகிறதா? என கலெக்டர் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

இதே போல கெரிகேப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களில் வர்ணம் பூசும் பணிகள், சமையல் அறை கட்டுமான பணிகள், சாலை பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். முன்னதாக கண்ணன்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை கலெக்டர் ஆய்வுசெய்தார்.

அப்போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பசுபதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஷ்குமார், துரைசாமி, உதவி பொறியாளர்கள் சாஸ்தா, ஜமுனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com