

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் உத்தரவின்படி, வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 300 பொறியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதன் முறையாக இவ்வளவு பெரிய அளவில் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டிருப்பது மின்வாரிய வரலாற்றில் முக்கியமான நிகcழ்வாக கருதப்படுகிறது. இந்த பதவி உயர்வுகள் அனைத்தும் தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் வழங்கப்பட்டுள்ளன என தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு பதிலடி தரும் வகையில், மின்வாரியத்தில் 300 பேருக்கு பதவி உயர்வு என்பது தவெக அரசின் பித்தலாட்டம் என திமுக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உண்மையின் முகம் இதுதான்: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பதவி உயர்வு குளறுபடியும், TN DIPR-ன் பொய் பிம்பமும்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் (TNEB) 300 உதவி செயற்பொறியாளர்களுக்கு (AEE) பதவி உயர்வு வழங்கப்பட்டதை, தவெக அரசு "வரலாற்றில் முதன்முறை" என விளம்பரப்படுத்தி வருகிறது. ஆனால், இது திசைதிருப்பும் வேலை!
நீண்டகாலப் போராட்டம்: 2000-2001 ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்த உதவி பொறியாளர்களின் 'Seniority' விவகாரம், பல ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இருந்தது.
நீதிமன்றத் தீர்ப்பு: மார்ச் 11, 2026 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இந்த முட்டுக்கட்டையை உடைத்தது.
திமுக அரசின் அதிரடி: தீர்ப்பு வந்த மறுநாளே, மார்ச் 12, 2026 அன்று, அப்போதைய திமுக அரசு 416 உதவி செயற்பொறியாளர்களை (AEE) செயற்பொறியாளர் (EE) பதவி உயர்விற்குப் பரிசீலிக்கப் பட்டியலிட்டது.
இந்த 416 பேர் அடங்கிய அதிகாரப்பூர்வ ஆவணமே இதோ இணைக்கப்பட்டுள்ளது!
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த செயல்முறையை, தற்போது தவெக அரசு தொடர்ந்தது சரி. ஆனால், தகுதி வாய்ந்த 416 பேரில், ஏன் 300 பேருக்கு மட்டும் தற்போது பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது?
மீதமுள்ள 116 AEE-களுக்கு என்ன ஆனது? அவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அவர்களைப் பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் உள்ளதா?
செய்திகளைத் திரித்து, திரைப் பட விளம்பர நிறுவனம் போலச் செயல்படும் TN DIPR, இந்த 116 பேரின் நிலை குறித்து மௌனம் காப்பது ஏன்?
தகுதியுள்ள அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே பொறியாளர்களின் நியாயமான எதிர்பார்ப்பு. உண்மையை மறைத்து மாயை உருவாக்கும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம்!
300 தான் அதிகமா என்றால் இல்லை 700 மேற்பட்ட பதவி உயர்வு வழங்கப்பட்ட வரலாறு உண்டு [28.01.2024 & 21.08.2025 G.O]
மார்ச் 2026-ல் திமுக அரசு 416 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.தற்போது ஜூன் 6, 2026-ல் 300 பேருக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பொறியாளர்களின் நிலை குறித்த தெளிவான விளக்கம் அரசுத் தரப்பில் இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.