

சென்னை,
தமிழகத்தில் பதிவுத்துறையில் கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்வு வழங்குவதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த பட்டியலில் டி.ஐ.ஜி.யாக இருப்பவர்களை கூடுதல் ஐ.ஜி.யாக பதவி உயர்த்துவதற்கு பட்டியல் தயாரிக்கப்படது. அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்த டி.ஐ.ஜி. ஆனந்த் என்பவருக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததுனால அவருக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக அவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதை எதிர்த்து ஆனந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, துறை ரீதியான நடவடிக்கைக்கு முன்பே தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலின் அடிப்படையில் ஆனந்துக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பதவி உயர்வுக்கான பட்டியல்ல பெயர் இடம் பெற்றிருந்தது என்பதற்காக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை உரிமையாக கேட்க முடியாது என்று தெரிவித்தனர்.
அதோடு, கறை படியாத அதிகாரிகளுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், பதவி உயர்வு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.