தை முடிவதற்குள் உரிய பதில் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

கோப்புப்படம்
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தேனி,
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியை அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி தரப்பு), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த சூழலில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலில் பாஜகவிடம் இருந்து கூட்டணி அழைப்பு வரும் என்று ஓ.பன்னீர்செல்வம் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தடையாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கூட்டணி குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது எல்லாம், தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லி வந்தார். இந்த நிலையில் இன்று தேனியில் அவரிடம் செய்தியாளர்கள் கூட்டணி குறித்து மீண்டும் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
சென்னை செல்கிறேன். இன்னும் 2 நாட்களில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. தை முடிவதற்கு இன்னும் நாட்கள் உள்ளன. தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.






