

கிருமாம்பாக்கம் அருகே மசாஜ் சென்டரில் விபசாரத்துக்காக தங்க வைத்திருந்த 5 இளம்பெண்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக உரிமையாளரை கைது செய்தனர்.
விபசாரம்
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கு சிறுமி உள்பட இளம்பெண்களை வைத்து விபசார தொழில் நடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விடுதி உரிமையாளர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் புதுச்சேரி கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் மெயின்ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபசாரத்துக்காக பெண்களை தங்க வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
5 இளம்பெண்கள் மீட்பு
இதையடுத்து கிருமாம் பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், ஏட்டு லூர்துநாதன் மற்றும் சிறப்பு அதிரடி படை போலீசார் அந்த மசாஜ் சென்டரில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரத்துக்காக 5 இளம்பெண்களை தங்க வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மசாஜ் சென்டர் உரிமையாளர் கொம்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர் என்ற கார்த்திக் (வயது 44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.