மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது

மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது
மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடந்தது
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நாமக்கல்லில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடநதது.

வேலைநிறுத்தம்

பொது வினியோக திட்டத்திற்கு என்று தனித்துறை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலை படியை ரேஷன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா நிவாரண பொருட்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் 3 நாட்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று ரேஷன்கடை பணியாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் மொத்தம் 547 பணியாளர்களில் 207 பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இருப்பினும் மாற்று ஆட்களை கொண்டு ரேஷன் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டதால் ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன.

ஆர்ப்பாட்டம்

இதையொட்டி நாமக்கல் பூங்கா சாலையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கரன் வரவேற்று பேசினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்ட பொருளாளர் மூர்த்தி, பாஸ்கரன், மணிகண்டன் உள்பட ரேஷன்கடை பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சரியான எடையில் தரமான பொருட்களை பொட்டலமாக வழங்க வேண்டும். மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ரேஷன்கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்கான ரேஷன்கடை பணியாளர்களை தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும். அனைத்து ரேஷன்கடைகளுக்கும் புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட செயலாளர் சரவணன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com