வியாபாரிகளிடம் கெடுபிடி தொடர்ந்தால்... வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கான உச்சவரம்பு ஏதுமின்றி அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் காலகட்டத்தில், வணிகர்கள் குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் ரொக்க பணத்தை எடுத்துச்செல்ல அனுமதிக்கும்படி ஏற்கனவே கோரியிருந்தோம். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தும் அதிகாரிகள் பல இடங்களில் ரூ.2 ஆயிரம் எடுத்துச் செல்லும் சாதாரண வழிபோக்கரிடம் கூட கணக்கு கேட்டு நீண்டநேரம் காத்திருக்க வைக்கிறார்கள்.

தொடர்ந்து இதே நிலை நீடிக்குமானால் தமிழகம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, தேர்தல் முடியும் வரை தமிழகம் முழுவதும் கடையடைப்பை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். வணிகர்களுக்கு உரிய தீர்வை விரைந்து காண வேண்டும். ரூ.2 லட்சம் வரை ரொக்கப்பணம் எடுத்துச் செல்வதற்கும் உரிய அறிவுறுத்தல்களை அதிகாரிகளுக்கு வழங்கி, வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் உரிமையை காக்க வேண்டும்.

மேலும், இதுநாள்வரை தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ரொக்கம், பொருட்கள் போன்றவற்றை உரியவர்களிடம் உடனடியாக திருப்பி அளிக்க வேண்டும். தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிகிற நாளோடு தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தி, ரொக்கப்பணம் கொண்டு செல்வதற்கான உச்சவரம்பு ஏதுமின்றி அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் விக்கிரமராஜா நிருபர்களிடம் கூறுகையில், "தமிழகம் முழுவதும் அதிகாரிகளை நாளை (இன்று) அழைத்துப் பேசி, வியாபாரிகளை பாதிக்காத சூழ்நிலையை உருவாக்கி தருவதாக உறுதி அளித்திருக்கிறார். இது உடனடியாக அமலுக்கு வந்தால் பிரச்சினை இல்லை. அப்படியில்லை என்றால், முதல்கட்டமாக வரும் 9-ந் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்." என்று குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com