கோவையில் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம்

கோவை கெம்பனூர் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
கோவையில் சாதிய தீண்டாமைக்கு எதிராக போராட்டம்
Published on

கோவை,

கோவை கெம்பனூர் பகுதியைச் சேர்ந்த அரசு பேருந்துகளில் சாதிய தீண்டாமை நடைமுறையை கடைபிடித்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகளை கண்டித்தும், 21-ம் எண் கொண்ட அரசு பேருந்து அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதிக்குள் செல்ல அனுமதியை மறுத்து வந்த சாதி வெறியர்களையும் எதிர்த்தும், அதுபற்றி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் புறக்கணித்து வரும் கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்தும், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் இன்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. போராட்டத்தில் பல நூறு பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சாதிய தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும், 21 எண் பேருந்து அண்ணாநகருக்குள் செல்ல வேண்டும், சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும், சாதி வெறியர்களை கைது செய் போன்ற முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள்,

அரசு போக்குவரத்து கழகமே சாதி பாகுபாடுகளை ஒப்புக்கொண்டு நடத்துவது வெட்ககரமானது. அரசு பேருந்து பட்டியலின மக்கள் வாழும் அண்ணாநகர் பகுதிக்குள் செல்லாத வகையில் சதி செய்து வரும் சாதி வெறியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்காமல், சும்மா வேடிக்கை பார்க்கும் நிலைப்பாடு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. சாதிய தீண்டாமை சட்டத்திற்கும், அரசியலமைப்பிற்கும் விரோதமாக நடைபெறுகிறது. எனவே, சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும், 21 எண் பேருந்து உடனடியாக அண்ணாநகருக்குள் செல்லும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், தீண்டாமை நடைமுறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். கோவை மாவட்டத்தில் சாதிய தீண்டாமையால் நடைபெற்ற இந்த போராட்டம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com