

சென்னை,
தங்கநகைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து தங்க நகைகளிலும் 6 இலக்கம் கொண்ட தனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்.யு.ஐ.டி.) பதிவு செய்ய வேண்டும் என இந்திய தரநிர்ணய ஆணையம் (பி.ஐ.எஸ்.) அறிவித்திருக்கிறது.
இந்த தனி அடையாள எண் மூலம் தங்கநகை எங்கு உருவாக்கப்படுகிறது? யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது? யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ளமுடியும் என்று கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னை நகை வணிகர்கள் சங்கத்தலைவர் உதய் உம்மிடி, மெட்ராஸ் வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்கத்தலைவர் ஜெயந்திலால் ஷலானி ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
2 மணி நேரம் கடையடைப்பு
தங்கநகையில் ஹால்மார்க் முத்திரையை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் தனி ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வர வேண்டும் என்று சொல்வதைத்தான் எதிர்க்கிறோம். இதன்மூலம் தங்கநகையை யார் வாங்குகிறார்கள்? அவர்கள் பின்னணி என்ன? என்பதை பார்க்கப்போகிறார்கள். இந்திய தரநிர்ணய ஆணையம் நகையின் தரத்தை பார்ப்பதைவிட்டுவிட்டு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தேவையில்லாத ஒன்று.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 11.30 மணி வரை 2 மணி நேரம் கடையடைப்பு செய்ய இருக்கிறோம். தமிழகத்தில் சென்னையில் உள்ள 7 ஆயிரம் கடைகள் உள்பட 35 ஆயிரம் நகைக்கடைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மூடப்பட்டிருக்கும். இது அடையாள போராட்டம்தான். மத்தியஅரசு செவிசாய்க்காவிட்டால், அடுத்தக்கட்டமாக ஒன்றுகூடி முடிவுசெய்வோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.