கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு


கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை உள்பட 214 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 17 April 2025 10:18 AM IST (Updated: 17 April 2025 11:26 AM IST)
t-max-icont-min-icon

சோனியாகாந்தி, ராகுல்காந்தி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனை கண்டித்து சென்னை சாஸ்திரி பவன் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, மாநில துணைத்தலைவர் சொர்ணா சேதுராமன், பொருளாளர் ரூபி மனோகரன் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். போலீசார் அவர்களை கைது செய்து திருவல்லிக்கேணியில் உள்ள சமுதாயநலக் கூடம் ஒன்றில் தங்கவைத்து பின்னர் அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில், சாஸ்திரி பவன் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, பொருளாளர் ரூபி மனோகரன், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட 214 பேர் மீது அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story