

சென்னை,
ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாவிட்டால் வலுவான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆட்டோ - டாக்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ்.பாலசுப்பிரமணி யம் சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கடந்த 13 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. 2022-ம் ஆண்டு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றியமைத்து, அதை மக்களுக்கும் ஓட்டுனர்களுக்கும் பாதிப்பு இல்லாத வகையில் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து அமைச்சர் தலைமையில் கடந்த 9-ந்தேதி நடைபெற்ற கூட்டத்தில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. நாங்கள் 1.5 கிலோ மீட்டருக்கு ரூ.60-ம், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.30-ம், காத்திருப்பு கட்டணமாக ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாயும், இரவு நேர கட்டணமாக 1½ மடங்கும் நிர்ணயிக்க வேண்டும் என்று விரிவான மனு அளித்துள்ளோம்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். நாளை 27-ந்தேதி (இன்று) போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இது தொடர்பாக கூட்டம் நடைபெற உள்ளது. அதில் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒருவேளை அறிவிப்பு வெளியாகவில்லை என்றால், வருகிற 28-ந்தேதி நடை பெறவுள்ள போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் இந்த கட்டண உயர்வை அறிவிப்பார் என்று நம்புகிறோம். அவ்வாறு அறிவிக்கப்படாவிட்டால், 29-ந்தேதி அனைத்து சங்கங்களும் கூடி ஆலோசித்து வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.