‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும் சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரி உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக்கோரியும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் அணி செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு, இளைஞரணி துணைச்செயலாளர் தாயகம் கவி எம்.எல்.ஏ. உள்பட இளைஞரணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்பு சட்டை அணிந்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்த கோரியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் இன்று (நேற்று) அறப்போராட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு நடக்கும்போது, வருடத்திற்கு வருடம் தற்கொலை அதிகரித்து வருகிறது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோன்று மத்திய அரசு விலக்கு அளித்து, முன்பு இருந்தது போல கவுன்சிலிங் முறையை கொண்டு வர வேண்டும்.

ஆன்லைன் வகுப்பில் பாடம் நடத்துவது புரியாமல் மாணவர் உக்கிரபாண்டி என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோன்று மாணவி நித்தியஸ்ரீ தனக்கு ஸ்மார்ட் போன் இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டார். எனவே, ஆன்லைன் வகுப்பு நடத்துவதை முறைப்படுத்த வேண்டும். ஆன்லைன் வகுப்பை தொலைக்காட்சி மூலம் நடத்தலாம்.

அரியர் பாடம் வைத்துள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களை ஒட்டுமொத்தமாக குழப்பத்தில் வைத்துள்ளார்கள். மாணவர்களின் கல்வியில் விளையாடக்கூடாது. அதற்கான உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோன்று, அண்ணா அறிவாலயத்தில் தயாநிதிமாறன் எம்.பி. தலைமையில், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கே.கே.நகர் தெற்கு பகுதியில் வர்த்தகரணி செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் முன்னிலையில், பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஓட்டேரியில் உள்ள அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராஜா அன்பழகன் தலைமையில் தியாகராயநகரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com