’சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி டிச.7-ல் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு

நடிகர்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கிருஷ்ணசாமி கூறினார்.
’சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி டிச.7-ல் ஆர்ப்பாட்டம் - கிருஷ்ணசாமி அறிவிப்பு
Published on: 

சென்னை,

கமல்ஹாசன் நடிக்கும் ’சண்டியர்’ படத் தலைப்பை மாற்றக்கோரி வரும் டிசம்பர் 7ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இது தொடர்பாக பேசியதாவது;

தென் மாவட்ட பிரச்சனை

”தமிழ்நாட்டில், சினிமா அரசியல் தலைவர்களை உருவாக்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, நடிகர்கள் அல்லது வில்லன்களின் ஒவ்வொரு அசைவும் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சண்டியர் என்பது மிகவும் மோசமான பெயர்... கமல்ஹாசன் ஏன் அதை மீண்டும் மீண்டும் முன்னிறுத்த விரும்புகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இது தனிப்பட்ட முறையில் கிருஷ்ணசாமிக்கும், கமல்ஹாசனுக்கும் நடக்கும் பிரச்சனை இல்லை. தென் மாவட்டங்களில் நடக்கும் பிரச்சனைகளால் இதை பற்றி பேசுகிறோம்.

பல பிரச்சனைகள்

ஏற்கனவே ’சண்டியர்’ படத்தின் பெயரை மாற்றி படப்பிடிப்பு நடந்தலாம் என பத்து நாள் முன்பு கூறி இருந்தோம். ஆனாலும், நாங்கள் படத்தின் தலைப்பை மாற்ற மாட்டோம் என்பது போல் படக்குழுவினர் மீண்டும் ’சண்டியர்’ என்ற தலைப்பில் போஸ்டர் ஓட்டி உள்ளனர். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள படத்திற்கு ’சண்டியர்’ என பெயர் வைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது என ஏற்கனவே அமைச்சர் ராஜ்மோகனிடம் மனு அளித்தோம். கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற சாதி தொடர்பான காட்சிகளால், கடந்த காலங்களில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது. அதனால் தான் இந்த தலைப்பை மாற்ற சொல்கிறோம்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்

எனவே இந்த ’சண்டியர்’ தலைப்பை மாற்றக்கோரி வரும் டிசம்பர் 7ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்த உள்ளோம். அன்றைய தினமே சாஸ்திரி பவனில் உள்ள தணிக்கை குழுவிடம் இந்த படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என மனு அளிக்க உள்ளேன்.”

இவ்வாறு அவர் கூறினார்.

X