

சிக்கந்தர் தர்கா
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் அவுலியா தர்கா உள்ளது. இந்த தர்காவுக்கு செல்ல போலீஸ் தரப்பில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இதனை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள், கோர்ட்டில் வழக்குகள் நடந்து வருகிறது. இதற்கிடையே மத வழிபாட்டு முறைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் நேற்று பழங்காநத் தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது, திருப்பரங்குன்றம் மலையில் வழக்கமாக கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்திலேயே இந்த ஆண்டும் தீபம் ஏற்ற வேண்டும், இரவு நேரங்களில் தர்காவில் தங்க அனுமதிக்க வேண்டும், மலை மீது உணவு பொருட்களை சமைக்க அனுமதிக்க வேண்டும், தர்காவில் 5 வேளை தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும். அவரவர் வழிபாட்டு முறைகளை பின்பற்றுவதற்கு அரசு அனுமதி வழங்க வேண்டும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.