

சென்னை,
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து போராடுவோம் என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்பி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குடிமக்கள் இன்று புதுடெல்லியில் ஒன்றுதிரண்டு நடத்திய மக்கள் நாடாளுமன்றத்தில் நானும் பங்கேற்று, ஜனநாயகம் காக்க உரக்கக் குரலெழுப்பினேன்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 326 உத்தரவாதம் அளித்துள்ள வாக்குரிமைக்குக் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தில் முன்வைக்கப்பட்ட 6 முக்கியக் குற்றச்சாட்டுகள்.
1. பாஜகவுடன் இணைந்து தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களை முறைகேடாகத் திருட சதித்திட்டம் தீட்டியது; வாக்காளர் பட்டியலை மாற்றி, தங்களுக்கு வேண்டியவர்களைச் சேர்க்கவும் நீக்கவும் அனுமதித்து, தேர்தல் ஜனநாயகத்தின் அடித்தளத்தின் மீதே தாக்குதல் நடத்தி தேசத்துரோகம் இழைத்தது.
2. முறைகேடான வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மூலம், எவ்வித இயற்கை நீதியுமின்றி பாரபட்சமாகவும் வெளிப்படைத்தன்மையின்றியும் 13.2 கோடி இந்தியக் குடிமக்களின் அடிப்படை வாக்குரிமையைத் திட்டமிட்டுப் பறித்தது.
3. நாடாளுமன்றத்தின் ஒப்புதலோ அல்லது கவனமோ இன்றி, 1960 வாக்காளர் பதிவு விதிகளின் படிவம் 6-ல் தன்னிச்சையாகத் திருத்தங்களை மேற்கொண்டு, முதன்முறை இளம் வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்வதைத் தடுத்து அவர்களின் உரிமையை நசுக்கியது.
4. ERONET / ECINET மென்பொருளைத் தவறாகப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலின் கட்டுப்பாட்டைத் தேர்தல் ஆணையத்தில் மையப்படுத்தி, உள்ளூர் தேர்தல் பதிவு அலுவலர்கள் தகுதியான வாக்காளர்களைச் சேர்ப்பதைத் தடுத்து தன்னிச்சையாகப் பெயர்களை நீக்கியது.
5. தேர்தல் ஆணையத்தில் உள்ள மற்ற இரு தேர்தல் ஆணையர்களையும் திட்டமிட்டு முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைத்து, அவர்கள் பதிவு செய்த 14 ஆட்சேபனைக் குறிப்புகளையும் மீறி, சட்டவிரோதமாக முடிவுகளை மேற்கொண்டது.
6. சுயேச்சையாகச் செயல்பட வேண்டிய அமைப்பை அடகுவைத்து, எதிர்க்கட்சிகளின் வாதங்களைக் கேட்காமல் தேர்தல் ஆணைய அலுவலகத்தையே பூட்டியது; எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கப்பட்டபோது கைகட்டி வேடிக்கை பார்த்தது; பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி செயல்பட்டு, தனது குடும்பத்தினருக்கு முக்கியப் பதவிகள் மற்றும் ஆதாயங்களைப் பெற்றுத் தந்தது.
டிசம்பர் 2023-ல் மோடி அரசு இவருக்கு அளித்த சட்டப் பாதுகாப்பு என்பது இந்த ஜனநாயக விரோத குற்றங்களுக்கான கவசமே தவிர வேறில்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சிதைத்து, 140 கோடி இந்திய மக்களின் வாக்குரிமையைத் திருடிய ஞானேஷ் குமார் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது!
மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில், 140 கோடி மக்களின் ஜனநாயக நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த இந்த அதிகார அத்துமீறலை ‘இந்தியா’ கூட்டணி ஒருபோதும் அனுமதிக்காது; வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம் என்ற உறுதியோடு, ஞானேஷ் குமார் உடனடியாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து விலகும் வரை ‘இந்தியா’ கூட்டணி மக்கள் மன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் சமரசமின்றித் தொடர்ந்து போராடும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.