

சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் கடந்த ஆண்டு மே 18-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆனால், விண்ணில் பாய்ந்த சில நிமிடங்களில் பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்வியடைந்தது.
அதேபோல், கடந்த ஜனவரியில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டில் இ.ஓ.எஸ்.-என்-1 செயற்கைகோள் பொருத்தப்பட்டிருந்தது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட பிறகு 3-ம் கட்டத்தின் இறுதியில் ஏற்பட்ட ஒரு முரண்பாட்டால் திட்டம் வெற்றியடையாமல் போனது.
இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் தோல்வி குறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவர் வி.நாராயணன் கூறுகையில், “பி.எஸ்.எல்.வி. சி-61 மற்றும் சி-62 திட்டங்களை தோல்விகளாகக் கருதவில்லை. மாறாக கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளாகவே அவற்றை கருதுகிறோம்.
எப்போதெல்லாம் ஒரு பின்னடைவு ஏற்படுகிறதோ, அதை நாங்கள் ஒரு தோல்வியாகக் கருதுவதில்லை. மாறாக அதைக் கற்றுக்கொள்வதற்கும் நமது அமைப்பை வலுப்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பாகவே கருதுகிறோம்' என்று தெரிவித்தார்.