தொண்டி அருகே நடுக்கடலில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பாகம் மீட்பு

திருப்பாலைக்குடி - தேவிபட்டினம் இடையே கடலில் மிதந்த அந்த உருளையை இஸ்ரோ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தொண்டி அருகே நடுக்கடலில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் பாகம் மீட்பு
Published on

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நடுக்கடலில் ஒரு வாரத்திற்கு முன்பு நீண்ட உருளை போன்ற ஒரு பொருள் மிதந்தது. இதுபற்றி அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடலுக்குள் சென்று பார்த்தனர். அது ராக்கெட் அல்லது ஏவுகணையின் உதிரிப்பாகம் என்பது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் நேற்று திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்தில் இருந்து வந்த அதிகாரிகள் குழுவினர், சுமார் 2 கடல் மைல் தூரத்துக்கு படகில் சென்றனர். திருப்பாலைக்குடி - தேவிபட்டினம் இடையே கடலில் மிதந்த அந்த உருளையை ஆய்வு செய்தனர்.

அதில் ஆபத்து பொருள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு, மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு திருப்பாலைக்குடி அருகே உள்ள பத்தனேந்தல் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். 25 அடிக்கும் அதிகமான நீளத்தில் அதிக எடையுடன் இருந்த அந்த பொருளை வாகனத்தில் ஏற்றி திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜனவரி 12-ந்தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி.-62 ராக்கெட்டின் ஒரு பகுதி வெடித்து சிதறியதில் சுமார் 600 கிலோ எடை கொண்ட டேங்க் கடலில் விழுந்துள்ளது. அது தற்போது கரை சேர்ந்து உள்ளது. இதனை திருவனந்தபுரம் இஸ்ரோ மையத்திற்கு கொண்டு சென்று செயலிழக்க செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com