”என்னை வேட்பாளராக முன்மொழிந்து..” - சாலமன் பாப்பையா மறைவுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல்

சாலமன் பாப்பையா மறைவுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
”என்னை வேட்பாளராக முன்மொழிந்து..” - சாலமன் பாப்பையா மறைவுக்கு பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல்
Published on

சென்னை,

பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா காலமானார். அவருக்கு வயது 90. மதுரையை சேர்ந்த சாலமன் பப்பையா பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணியாற்றிய இவர், தமிழ் இலக்கியங்கள் குறித்து ஆற்றிய உரைகளாலும் பிரபலமானவர். திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ளார்.

தமிழக அரசு சார்பில் கடந்த 2000-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து தமிழ் மொழி மற்றும் இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, 2021-ம் ஆண்டு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. சாலமன் பாப்பையா, ஏற்கனவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். சாலமன் பாப்பையா மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சாலமன் பாப்பையா மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழறிஞர், பட்டிமன்ற நடுவர், எழுத்தாளர், கல்லூரிப் பேராசிரியர், பதிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட மதுரையின் பெருமைமிகு ஆளுமைகளில் ஒருவரும், எனது தந்தையார் காலம் முதலே எங்கள் குடும்பத்துடன் நெருக்கமான நட்பு பாராட்டி வந்தவருமான ஐயா பத்மஸ்ரீ சாலமன் பாப்பையா அவர்கள், நான் போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் என்னை வேட்பாளராக முன்மொழிந்து, படிவத்தில் கையெழுத்திட்டவர்.

அவரது மறைவுச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவர்தம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழார்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மதுரையின் மண்ணோடும், மக்களோடும், தமிழோடும் இவ்வாளுமையின் நினைவு என்றும் நிலைத்திருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com