

மதுரை,
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி பெற்றிருந்தனர். மொத்தம் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போது வரை விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், மதுரை மத்திய தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மதார் பதுருதீன், இதுவரை 63,410 வாக்குகள் பெற்று வெற்றியை உறுதி செய்துள்ளார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க. அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், இந்த முறை 44,286 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். அதே போல், மதுரை மத்திய தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இயக்குநர் சுந்தர்.சி, 33,488 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.