செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் நின்று செல்ல நடவடிக்கை: பொதுமக்கள் கோரிக்கை

செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நடந்துவரும் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணியை மதுரை ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை விரிவாக்கப்பணி, மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஆய்வு செய்ய மதுரை ரெயில்வே உதவி கோட்ட மேலாளர் நாகேஸ்வரராவ் வருகை புரிந்தார். அவரிடம் செய்துங்கநல்லூர் பொதுமக்கள் சார்பில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை செய்துங்கநல்லூரில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனுவை கொடுத்தனர். இந்த மனு அளிக்கும் நிகழ்வுக்கு கூட்டுறவு சங்க தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார்.
அப்போது அவருடன் வந்திருந்த பொதுமக்கள், செய்துங்கநல்லூர் ரெயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நடைமேடை மற்றும், மேம்பாலம் பணிக்காக நன்றி தெரிவித்தனர். இரண்டாவது நடைமேடையில் மின்சார விளக்கு வசதி செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து 3 ஆண்டு காலமாக பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என பொதுமக்கள் போராடி வருகிறார்கள். அந்த ரெயிலை செய்துங்கநல்லூரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. தனராஜ், எஸ்.ஐ. மாரிசுடலை, கூட்டுறவு ஆடிட்டர் திருச்செல்வம், ராணுவ வீரர் ஆறுமுகம், வியாபாரிகள் சங்க தலைவர் முருகன், தவ்ஹீத் ஜமாதை சேர்ந்த அப்துல், சன்னியாசி, கூட்டறவு சங்க மேலாளர் மாரியப்பன், முன்னாள் வார்டு உறுப்பினர் வேம்பு துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.






