அனைவருக்குமான பொது வினியோக திட்டம் தொடர்ந்து செயல்படவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அனைவருக்குமான பொது வினியோக திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்யவேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
அனைவருக்குமான பொது வினியோக திட்டம் தொடர்ந்து செயல்படவேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்
Published on

விவரங்கள் கேட்பு

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நியாயவிலை கடைகளில் மாதம் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக தரப்படும். உளுத்தம் பருப்பு மீண்டும் வழங்கப்படும். மின் சேமிப்பை கருத்தில்கொண்டு ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் மானிய விலையில் மூன்று எல்.இ.டி. பல்புகள் வழங்கப்படும். எல்லா பொருட்களும் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகளை அள்ளிவீசி, ஆட்சி கட்டிலில் அமர்ந்த தி.மு.க. அரசு, வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை அவர்களின் ஆதார் எண்ணுடன் வழங்குமாறு வருமான வரித்துறையிடம், உணவுத்துறை வாயிலாக கேட்டுள்ளது.

இது 'அனைவருக்குமான பொது வினியோக திட்டம்' என்பதை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது. அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தில் உள்ள பயனாளிகளை குறைக்கும் பொருட்டு, வருமான வரி விவரங்களை தமிழக அரசின் உணவுத்துறை கேட்கிறதோ? என்ற எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும்.

ஏழைகளை பாதிக்கும்

நியாயவிலை கடைகளில் நடைபெற்று வரும் முறைகேடுகள் ஒழிக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. அதே சமயத்தில், வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோக திட்டம் என்ற நோக்கத்தையே சீர்குலைப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் இருப்பவர்கள் வருமான வரி வரம்பிற்குள் வந்து விடுவார்கள். ஒரு குடும்பத்தின் தலைவர் வருமான வரி செலுத்துபவராக இருந்தாலும், அவரை நம்பி எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்? அவருடைய பின்னணி என்ன? அவரால் வெளிச்சந்தையிலிருந்து பொருட்களை வாங்கி குடும்பத்தை நடத்த இயலுமா? என்பதையெல்லாம் ஆராயவேண்டும்.

வசதி படைத்தவர்கள் நியாயவிலை கடைகளில் பொருட்களை வாங்குவதை விட்டுத்தரவேண்டும் என்றால், பொதுவான வேண்டுகோளை அரசின் சார்பில் வெளியிடுவதுதான் பொருத்தமாக இருக்கும். வருமான வரி செலுத்துவோரின் விவரங்களை பெற்று அதன் அடிப்படையில் அவர்களை விட்டுக்கொடுக்க வலியுறுத்துவது என்பது மக்களின் விருப்பத்துக்கு எதிரான செயல். தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு பணி பாதுகாப்பு என்பதே இல்லாத சூழ்நிலை உள்ளது. இவர்கள் வருமான வரி செலுத்துகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து, அவர்களை வசதி படைத்தவர்களாக கருத முடியாது. தமிழக அரசின் இதுபோன்றதொரு முயற்சி ஏழை-எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும்.

முதல்-அமைச்சர் உறுதி செய்யவேண்டும்

பொதுவான வேண்டுகோளின் அடிப்படையில் வசதி படைத்தவர்கள் தாமாக முன்வந்து ரேஷன் பொருட்களை விட்டுத்தர முன்வந்தால், அதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை. அதே சமயத்தில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டால் அதனை அ.தி.மு.க. கடுமையாக எதிர்க்கும். எனவே முதல்-அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தப்படுவதையும், அரசின் செலவினத்தை மிச்சப்படுத்துவதற்காக பயனாளிகளின் எண்ணிக்கையை வருமானத்தின் அடிப்படையில் குறைத்து இலக்கு சார்ந்த பொது வினியோக திட்டமாக மாற்றும் முயற்சி தடுத்து நிறுத்தப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com