பொது வினியோக திட்ட குறைதீர்வு முகாம்நாளை நடக்கிறது

பொது வினியோக திட்ட குறைதீர்வு முகாம்நாளை நடக்கிறது

கடலூர் மாவட்டத்தில், நாளை பொது வினியோக திட்ட குறைதீர்வு முகாம் நடக்கிறது.
Published on

கடலூர் மாவட்டத்தில், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை 10 தாலுகா பகுதிகளிலும் பொதுவினியோகத்திட்ட குறைதீர்வு முகாம் நடக்கிறது. அதன்படி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் இந்த முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும்.

குடும்ப அட்டைகள்

கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைகளுக்கு சென்று பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச்சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம்.

புகார்

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 -ன்படி நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய மனுக்களையும் அளித்து பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com