தமிழகத்தில் முதல் நாளில் 3¼ லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி பொது சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் முதல் நாளில் 3¼ லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல் நாளில் 3¼ லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி பொது சுகாதாரத்துறை தகவல்
Published on

சென்னை,

நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. இதில் சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

தமிழகத்திலும் 33 லட்சத்து 46 ஆயிரம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை சைதாப்பேட்டையில் தொடங்கி வைத்தார். பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். சில மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் வாங்கிய பிறகு தடுப்பூசி செலுத்திக் கொள்வதாக தெரிவித்தனர்.

முதல் நாளில் 3 லட்சம்

இந்தநிலையில் முதல் நாளான நேற்று தமிழகத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 493 சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் அதிகபட்சமாக திருவண்ணாமலையில் 25 ஆயிரத்து 427 பேருக்கும், விழுப்புரத்தில் 17 ஆயிரத்து 296 பேருக்கும், திருச்சியில் 14 ஆயிரத்து 556 பேருக்கும், மதுரையில்14 ஆயிரத்து 731 பேருக்கும், சேலத்தில் 14 ஆயிரத்து 65 சிறுவர்களுக்கும், 14 மாவட்டங்களில் தலா 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

குறைந்தபட்சமாக ராணிப்பேட்டையில் 2 ஆயிரத்து 985 பேருக்கும், திருவாரூரில் 2 ஆயிரத்து 10 பேருக்கும், மயிலாடுதுறையில் 1,037 சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் முதல் நாளில் 4 ஆயிரத்து 601 சிறுவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அந்தவகையில் முதல் நாளான நேற்று இரவு 7.20 மணி நிலவரப்படி 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 9.94 சதவீதம் சிறுவர்கள் தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கு தனியாக வரிசை

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு ஆஸ்பத்திரிகள் என வழக்கமாக செயல்படும் மையங்களில் சிறுவர்களுக்கு என்று தனியாக வரிசை ஏற்படுத்தி கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும்படி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளத்தில் (https://www.cowin.gov.in/) பதிவு செய்துவிட்டுதான் வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசியை செலுத்துவார்கள் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com