தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு

மாசடைந்த நீர் நிலைகளை குழந்தைகள் அணுகாமல் பெற்றோர் பாதுகாத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள நீச்சல் குளங்களை ஆய்வு செய்ய பொது சுகாதாரத்துறை உத்தரவு
Published on

சென்னை,

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா (Naegleria fowleri) தொற்று அதிகரித்து வருவதையடுத்து, தமிழகத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இயற்கை நன்னீரில் காணப்படும் இந்த அரிய வகை அமீபா மூக்கின் வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையைப் பாதிக்கும். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கேரளாவில் இதனால் மூவர் உயிரிழந்ததுடன், மேலும் எட்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனை முன்னிட்டு, தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சிறப்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். குறிப்பாக, மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் உள்ள குளங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் நீச்சல் குளங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீச்சல் குளங்களில் தண்ணீரை இரண்டு நாள்களுக்கு ஒருமுறை மாற்றி, குளோரின் பவுடர் சேர்த்து சுத்திகரிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு கட்டாய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாடுவதைத் தவிர்க்க பெற்றோர்கள் எச்சரிக்கப்படுகின்றனர்.

மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதால், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்று பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com